
கும்பகோணம்: “நீட் தேர்வுக்கு எதிராகக் கூட்டணிக் கட்சிகளைத் தூண்டிவிட்டு திமுக தரமான கல்விக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக” தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சாடியுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சனிக்கிழமை கும்பகோணம் வந்திருந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுச் சாதனை படைத்துள்ளார். அவர், 5 ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசாக, பொருளாதார முன்னேற்றம், தேசப் பாதுகாப்பு, ஏழைகள் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவார். நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் மாவட்டத்தைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். குறுவை தொகுப்புத் திட்டத்தை, சரியாக, கவனமாக, முறைகேட்டுக்கு இடமில்லாத வகையில் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
விவசாயிகள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, அவர்களுக்கு நிவாரணம் கொடுக்காமல் குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவித்து, அதை மறைக்க நினைப்பது தவறான செயல். பயிர் பிரச்சினை விவசாயிகளின் உயிர் பிரச்சினையாகும். இதில் அரசியல் செய்யக் கூடாது. கர்நாடக அரசு, சட்டத்தை மதித்துத் தமிழகத்துக்கான தண்ணீரைக் கொடுக்க வேண்டும். அதனைக் காலம் தாழ்த்த திமுகவும் காரணமாக இருக்கக் கூடாது. எனவே, கூட்டணி கட்சி மனநிலைக்கு அப்பாற்ப்பட்டு இதனை அணுகுவதோடு மட்டுமில்லாது கர்நாடக அரசிடமிருந்து தமிழக அரசுக் காலம் தாழ்த்தாமல் நீரைப் பெற்று தர வேண்டும்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் எனத் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இந்த விஷயத்தில் திமுக அரசு, மாணவர்களையும், பெற்றோர்களையும் தொடர்ந்து குழப்பிக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல.
நீட் தேர்வில் இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள் 2-ம் இடம் பெற்று வருகிறார்கள். மேலும். இந்திய அளவில் 720 மதிப்பெண் பெற்று 61 மாணவர்கள் சாதனைப்படைத்துள்ளார்கள். எனவே, அரசியல் நோக்கத்துடன், நீட் தேர்வை ரத்துச் செய்ய வேண்டும் எனத் திமுக கூறுவதோடு மட்டுமில்லாமல் கூட்டணிக் கட்சிகளையும் தூண்டி விட்டுத் தரமான கல்விக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதேசமயம் இன்னொரு பக்கம், போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாத அரசாகத் தமிழக அரசு இருப்பது வருத்தமளிக்கிறது” என்று அவர் கூறினார்.




