ஜெனிவா: வீட்டு பணியாளர்களைச் சித்ரவதை செய்த வழக்கில், ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு ஸ்வீஸ் நீதிமன்றம், சிறை தண்டனை வழங்கி உள்ளது. இருவருக்கு 4.6 ஆண்டும், மற்ற இருவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கியது.
பிரிட்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியான கோபிசந்த் ஹிந்துஜா, வங்கி, எண்ணெய், வர்த்தகம் உட்பட பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவரின் சகோதரர்களில் ஒருவரான பிரகாஷ், ஹிந்துஜா குழுமத்தின் பல்வேறு பணிகளைக் கவனித்து வருகிறார்.
ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் சொகுசு மாளிகை உள்ளது. இங்குப் பணியாற்றிய இந்திய பணியாளர்களைப் பிரகாஷ் ஹிந்துஜா (78), அவரின் மனைவி கமல் ஹிந்துஜா (75), மகன் அஜய், மருமகள் நம்ரதா ஆகியோர் கொத்தடிமைபோல் நடத்தியதாகவும், அவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததுடன், குறைந்த சம்பளம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதுவும் ஸ்வீஸ் நாணயத்தில் வழங்காமல், இந்திய ரூபாயில் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்க்கக் கட்டாயபடுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கு ஜெனிவாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்தது. அவர்கள்மீதான குற்றச்சாட்டை உறுதி செய்த நீதிமன்றம், பிரகாஷ் மற்றும் கமல் ஹிந்துஜாவுக்கு தலா 4.6 ஆண்டு சிறை தண்டனையும், அஜய் மற்றும் நம்ரதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கப்பட்டபோது இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ஹிந்துஜா தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
