சுறா படத்தில் மீனவர்களுக்காகப் பேசிய விஜய், இன்று நொச்சிக்குப்பம் மக்களை காலி செய்யப் பார்ப்பதாக அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 கொலைகள் நடக்கும் அளவுக்குச் சட்டம்-ஒழுங்கு மிக மோசமான சூழ்நிலையில் உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
சினிமாவில் ஆக்ஷன் செய்வது போல ரீல்ஸ் செய்வதால் மட்டும் ஆட்சியை வெற்றிகரமாக நடத்திவிட முடியாது என்றும், அதற்குப் போதிய அனுபவம் தேவை என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் வெளிநாட்டுக்கு சென்று வெறும் 12 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மட்டுமே முதலீட்டை ஈர்த்துள்ளதாகக் கூறினார். வெளிநாடு செல்லும்போது தொழில்துறை அமைச்சரை ஏன் அழைத்துச் செல்லவில்லை? இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய லண்டன் செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார். சுறா படத்தில் மீனவர்களுக்காகப் பேசிய விஜய், இன்று நொச்சிக்குப்பம் மக்களை காலி செய்ய பார்ப்பதாகக் கூறினார். எனவே, தவெகவுக்கு வாக்களித்த மக்கள் இன்று ஏமாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

