
ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட ஆளில்லா சோதனைக்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்த ஆயத்த பணிகளை இஸ்ரோ தற்போது மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் மீண்டும் பூமியில் பத்திரமாகத் தரையிறக்குவதற்கான சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக இஸ்ரோ ககன்யான் திட்டத்தில் ஆள் இல்லாமல் விண்கலனை அனுப்பி சோதனை செய்யவுள்ளது. இதற்காக முதல் சோதனையாக, திட்டம் தோல்வியில் முடிந்தால் ஆட்களை மீட்ப்பதற்கான செயல்முறை எடுத்துக்காட்டும் சோதனையை மேற்கொள்ளப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இன்டகிரேடட் ஏர் டிராப் டெஸ்ட் க்ரூ மாடல் எனப்படும் கட்டமைப்பின் மாதிரி தயாரிக்கபட்டுள்ளது.
இந்தச் சோதனையின்போது டெஸ்ட் ராக்கெட் பயன்படுத்தப்படும். அதாவது ஒற்றை என்ஜின் கொண்ட இந்த ராக்கெட் ஆளில்லாத க்ரூ மாட்யூலை வானுக்கு கொண்டு செல்லும். பின்னர் சுமார் 17 கி.மீ உயரத்திலிருந்து இது கீழே விடப்படும். இந்தச் செயல்பாட்டில் சுமார் மணிக்கு 1,470 கி.மீ வேகத்தில் மாட்யூல் பூமியை நோக்கி விழும். ஒரு கட்டத்தில் மாட்யூலில் உள்ள பாராசூட் விரிந்து வேகத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து ஹரிகோட்டாவிலிருந்து 10 கி.மீத்தொலைவில் வங்க கடலில் பத்திரமாகத் தரையிறங்கும். இந்நிலையில் ‘டிவி-டி1’ என்ற சோதனை ராக்கெட்டின் சோதனை ஓட்டம் நாளை நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளைக் காலை 7 மணி முதல் 9 மணிவரை இந்தச் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது. இதையடுத்து னிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஆளில்லா சோதனை கவுண்ட் டவுன் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.


