G. Kishan Reddy: ஹைதராபாத், பாக்கியாநகர் என மாற்றப்படும்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத், பாக்கியா நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கிருஷ்ணன் ரெட்டி  அறிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்குத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மத்திய அமைச்சரும், தெலுங்கானா மாநிலத்தின் பாஜக கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான G.கிருஷ்ணன் ரெட்டி, திங்கட்கிழமை காலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய  கிருஷ்ணன் ரெட்டி தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத் என்ற  பெயர் பாக்கியா நகர் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் கிருஷ்ணன் ரெட்டி பேசும்போது , தமிழ் நாட்டில் திமுக ஆட்சியின்போது மெட்ராஸ்  சென்னையென மாற்றியதை நினைவு கூர்ந்தார். அதுமட்டுமல்ல மும்பை, கொல்கத்தா நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதையும் தெரிவித்தார்.

தெலுங்கானாவில் பாஜக கட்சி ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக ஹைதராபாத் நகரத்தின் பெயரை மாற்றுவோம் என்றார். ஹைதர் என்றால் என்ன?  யார் அந்த ஹைதர்? எங்கிருந்து வந்தார்? நமக்கு அந்தப் பெயர் தேவையா?  யாருக்கு வேண்டும் ஹைதர் பெயர்? வரும் சட்டமன்ற தேர்தலில் வென்று  ஆட்சிக்கு வந்தால்,  தமிழ்நாட்டில்  திமுக அரசு மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றியது போல  ஹைதராபாத் பெயரைப் பாக்கியா நகராக மாற்றப்படுவது உறுதி என்று பாஜக எம்பி கிருஷ்ணன் கூறினார்.

பெயரை மாற்றுவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறிய அவர் இதுகுறித்து ஆலோசனை செய்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்றார்.  மேலும் அவர் பாக்கியா என்றால் அதிர்ஷ்டம் என்று பொருள் எனத் தெரிவித்தார்.

முன்னதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தெலுங்கானா மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு  வந்திருந்தபோது ஹைதராபாத் நகரத்தின் பெயர் பாக்கியாநகர் என மாற்றப்படும் என்றும், மஹபூப்நகர் என்ற பெயர் பலமுரு என்று மாற்றம் செய்யப்படும்  எனத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *