
சென்னை-தூத்துக்குடி இடையே இன்று விமான சேவை தொடக்கம்; கனமழை, வெள்ளம் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் 3 நாட்களுக்குபின் தொடங்கப்பட்டது.
கடந்த இரு தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18-ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அது கனமழையால் தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆறுகளும் நிறைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது.
கனமழையால் தூத்துக்குடி விமான நிலையத்தை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் விமான நிலையம் மூடப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக சென்னை – தூத்துக்குடி இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடியில் மழை தற்போது ஓய்ந்துள்ளது. விமான நிலையத்தில் தேங்கிய நீர் தற்போது அகற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு பின் சென்னை – தூத்துக்குடி இடையேயான விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனால் சென்னையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு 64 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டது. அதேபோல், தூத்துக்குடியில் இருந்தும் சென்னைக்கு இன்று விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

