Fisheries Department – Tamil Nadu Latest: மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி…

Advertisements

அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி தொண்டி அருகே கடலில் அதிக ஒளியை பாய்ச்சி மீன்பிடித்த படகு, லைட்டுகள், ஜெனரேட்டர் ஆகியவற்றை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட மீன்பிடி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட அதிக ஒளியைப் பாய்ச்சி இரவு நேரங்களில் மீன் பிடிக்கப்பட்டு வருவதால் பெரும்பாலான மீனவர்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார் வந்தது.இந்த நிலையில் இது போன்ற செயல் இடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீன்வளத் துறை அதிகாரிகள் தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, முள்ளிமுனை, மோர்பண்ணை ஆகிய பகுதிகளில் மீனவர்களை சந்தித்து தடை செய்யப்பட்ட அதிக ஒளியை பாய்ச்சி மீன்பிடிக்க கூடாது என்றும் மீறினால் படகு மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி நம்புதாளை பகுதியில் அதிக ஒளியைப் பாய்ச்சி மீன் பிடிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது . அதன்பேரில் மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹிர், உதவி ஆய்வாளர் குருநாதன் மற்றும் அதிகாரிகள் அந்தப் பகுதியில் கண்காணித்த போது நம்புதாளை படையாட்சி தெரு பகுதியைச் சேர்ந்த மீனவர் கருப்பையா என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் அதிக ஒளியை பாய்ச்சும் இரண்டு 200 வாட்ஸ் லைட்டுகள் மூன்று 100 வாட்ஸ் லைட்கள் பொருத்தப்பட்டு மீன் பிடித்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து படகு, லைட்டுகள், ஜெனரேட்டர் ஆகியவற்றை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இதுபோன்று அதிக ஒளியை பாய்ச்சி மீன் பிடிக்கும் படுகுகளை தொடர்ந்து கண்காணித்து பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *