
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியருக்குச் சொந்தமான 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள தைலம் மரக்காட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு , இந்தத் தீயானது மலமளவெனப் பரவி அருகே இருந்த தனி நபருக்குச் சொந்தமான தென்னை நார் தொழிற்சாலையிலும் பரவியதால் 10 லட்சம் மதிப்பிலான நார்த்தூள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கச்சிரான்பட்டியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தமிழ்செல்வன் என்பவருக்குச் சொந்தமான 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள தைல மரக்கட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்தக் காட்டுப் பகுதியிலிருந்த சருகுகளில் தீ மலமளவெனப் பிடித்து எரிந்ததால் அந்தப் பகுதியே புகை மூட்டமாகக் காட்சியளித்தது. மேலும் அந்தத் தீயானது காற்றின் வேகத்தால் அருகே இருந்த ராமச்சந்திரன் குமாருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலையிலும் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி தீயணைப்பு துறை வீரர்கள் தைல மர காட்டில் பற்றிய தீயை வனத்துறையுடன் இணைந்து தண்ணீர் பீச்சி அடித்தும் மர கிளைகளைக் கொண்டும் அணைத்து வருகின்றனர்.
அதே வேளையில் தென்னை நார் தொழிற்சாலையில் பற்றிய தீயையும் தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீச்சி அடித்துக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீரத் தீர இரண்டு மூன்று டிராக்டர் வாகனங்கள்மூலம் தண்ணீர் எடுத்து வரப்பட்டு பின்னர் தீயணைப்பு வாகனத்தில் நிரப்பப்பட்டு அதன் மூலம் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மேலும் இந்தத் தீ விபத்தால் தென்னை நார் தொழிற்சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் மதிப்பிலான நார்த்தூள்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் இந்தத் தீ விபத்து தைலமர காட்டுப்பகுதிக்கு மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பி காற்றின் வேகத்தால் தைல மரத்தில் பட்டு அதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் மேலும் இந்த விபத்துகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



