
வழக்குரைஞர் சங்கத் தலைவர் கடிதத்தால் புதிய சர்ச்சை!
புதுடெல்லி: தேர்தல் நன்கொடை பத்திர வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பை நிறுத்தி வைக்கும்படி, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பெயரில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
அந்தக் கடிதம் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயற்குழு ஒப்புதலின்றி தன்னிச்சையாக வழங்கப்பட்ட கடிதம் என்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்குத் தனி நபர்களும் நிறுவனங்களும் தேர்தல் நன்கொடை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் நிதி பத்திர திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த மாதம் 15 ஆம் தேதி இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதுவரை தேர்தல் பத்திரங்களைப் பெற்றவர்கள் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள் உள்ளிட்ட விவரங்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இந்தக் கால அவகாசத்தை ஜூன் 30-ம் தேதிவரை நீட்டிக்கும்படி கடந்த நாலாம் தேதி அன்று உச்ச நீதிமன்றத்தில் ஸ்டேட் வங்கி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.
அத்துடன் ஏற்கனவே உத்தரவிட்டபடி தேர்தல் பத்திர விவரங்களை நேற்று மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தேர்தல் பத்திர விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் வங்கி நேற்று மாலை சமர்ப்பித்து விட்டது. அதன்படி இதுவரை 16 ஆயிரத்து 518 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை ஸ்டேட் வங்கி விநியோகம் செய்து உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் பத்திரங்கள்மீதான உச்ச நீதிமன்றத்தின் திருப்பை நிறுத்தி வைத்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க தலைவர் ஆதிஷ் ஸ்ரீ அகர்வால் நேற்று ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
“நன்கொடை வழங்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுவது அவர்களைப் பலிகடா வாக்கும்” என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த அவர், இதில் ஜனாதிபதி தலையிட்டு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நிறுத்தி வைக்கும் படியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், சங்கத்தின் தலைவர் பெயரில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் அதிகாரப்பூர்வமானது அல்ல” என்று சங்கத்தின் செயற்குழு சார்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கச் செயலாளர் ரோகித் பாண்டே வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தத் தகவலைக் கூறியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில் “இது போன்ற கடிதத்தைத் தலைவர் அனுப்புவதற்கு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள அதிகாரம் வழங்கவில்லை ” என்றும், “அவருடைய கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அத்துடன் “சங்கத் தலைவர் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும் கடிதம் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறுவதுடன் குறைத்து மதிப்பிடுவதற்கும் உட்படுத்தும்” என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் வரவேற்பு பெற்ற உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்புக்கு எதிராக வழக்குரைஞர்கள் சங்கத்தின் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தச் சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



