Election Commission Of India: 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10 ஆயிரம் கோடி செலவு!

Advertisements

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான சாத்தியங்களை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி அமைக்கப்பட்ட இந்த குழுவில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து இக்குழு ஆலோசனைகளை பெற்று வருகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை 10 நாட்கள் தெரிவிக்கலாம் என்று ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த 5-ம் தேதி கேட்டுக்கொண்டது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் 5 பேரின் கருத்துகளை கேட்டு இக்குழு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கும் செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான். எனவே மூன்று முறை மட்டுமே அதை சுழற்சியாக பயன்படுத்த முடியும். இந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு நாடு முழுவதும் 11.80 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க வேண்டியிருக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இரண்டு வகையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும்” என்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *