
தேர்தல் ஆணையத்தி்ன் விதிகளுக்கு உட்பட வேண்டும் இல்லையெனில் திமுகவின் கட்சி அங்கிகாரத்துக்கு அபாயம் உள்ளது என பாஜக மூத்த நிர்வாகி எச். ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் புதூரில் பாஜக கட்சி சார்பில் கோவை பாலியல் வன்கொடுமை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த நிர்வாகி எச். ராஜா கலந்து கொண்டார்.
இதில், 300-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா பேசியபோது, ரஜினிகாந்த் சொன்னது போல் தமிழ்நாட்டில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை அறிக்கை முன்னுக்குப் பின் முரணாக உள்ளது என்றார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார் என்றும் 2021 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவம் என்பது ஆண்டுக்கு 2 ஆயிரமாக ஆக இருந்தது இப்போது 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது எனக் குற்றம் சாட்டினார்.
தேர்தல் ஆணையம் வாக்கை திருடுகிறது என முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கட்சிக்கு அங்கீகாரம் வாங்கும்போது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்போம் என எழுதி கொடுத்து விட்டுதான் திமுக அங்கீகாரம் வாங்கி இருக்கிறது என்றும் அதனை மீறினால் கட்சியின் பதிவு அபாயத்துக்கு உள்ளாகும் என்றார்.
தனியரசு திமுகவிற்கு சென்று பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், திமுகவிற்கு போனால் அடிமை சாசனம் கையெழுத்து போட்டு விட்டு தான் போக வேண்டும் என்று கூறினார்.




