Edappadi Palaniswami:அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார்!

அண்ணாமலை மெத்தப்படித்த ஞானி என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை:கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எப்படி நடந்துகொண்டது என்பதை நாடே அறியும். ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தெரியும். தமிழ்நாட்டில் பாஜக எங்கே வளர்ந்துள்ளது?. 0.52 சதவீதம் குறைவான வாக்குகளையே பாஜக பெற்றிருக்கிறது. 500 நாட்களில் 100 வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் எனக்கூறித்தான் கோவை மக்களின் வாக்குகளை அண்ணாமலை பெற்றார்.

அண்ணாமலை வந்த பிறகுதான் பாஜகவுக்கு பலம் வந்ததுபோல் மாயையை உருவாக்குகிறார். வேண்டுமென்றே அதிமுகவை குறை சொல்லித் திட்டமிட்டு பேசி வருகிறார் அண்ணாமலை. பாஜக தலைவராகத் தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசிடமிருந்து என்ன திட்டங்களை அண்ணாமலை பெற்று தந்திருக்கிறார்?. தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத பாஜக தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார்.

பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டிமூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். மற்ற கட்சிகளை அவதூறாகப் பேசுவதை அண்ணாமலை வாடிக்கையாக வைத்துள்ளார். அண்ணாமலை மெத்தப்படித்தவர்; மிகப்பெரிய அரசியல் ஞானி. அவரது கணிப்பு அப்படி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை விட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி அடைந்துள்ளார்.

கடந்த தேர்தலில் 18.80% வாக்குகள் பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 18.2% மட்டுமே பெற்றுள்ளது. இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மக்களவை தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு மாதிரியும், மக்களவை தேர்தலில் ஒரு மாதிரியும் வாக்களிக்கின்றனர்.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் இப்போதைய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகளைவிட 2024 தேர்தலில் அண்ணாமலை குறைவான வாக்குகளைப் பெற்றார். கடந்த தேர்தலில் 300 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெயலலிதாதான் அதிமுகவை இனி ஏற்று நடத்துவார், அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என ஜானகி அம்மையார் அறிக்கை வெளியிட்டதைப் போல, நற்பண்புடன், நல்லெண்ணத்தின் அடிப்படையில் சசிகலாவும் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என அதிமுக தொண்டர்கள் நினைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *