ED Officer Ankit Tiwari Case: ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!

லஞ்ச வழக்கில் கைதான அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை ஐகோர்ட் கிளை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ் பாபுவிடம், ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கைதான, மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டுத் திண்டுக்கல் நீதிமன்றம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடியாகின.

மீண்டும் ஜாமீன் கோரி அங்கித் திவாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி விவேக்குமார், ‘இந்த மனுவை விசாரிக்க விரும்பவில்லை. இதன் மீதான விசாரணையை வேறு நீதிபதி முன் பட்டியலிட வேண்டும்’ எனப் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி எம்.தாண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிகுமார் ஆஜராகி, மனுதாரருக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தயார் நிலையில் உள்ளது.

உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து இருந்ததால் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யத் தயாராக உள்ளோம்’ எனக் கூறி அதற்கான நகலை நீதிபதி முன்பு தாக்கல் செய்தார். இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *