Malai Raman Temple: மலைராமன் கோவிலுக்குப் பக்தர்கள் செல்லத் தடை!

Advertisements

புத்தூர் மலை உச்சியில் உள்ள மலைராமன் கோவிலுக்குப் பக்தர்கள் சென்று வழிபட வனத்துறையினர் தடைவிதித்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை உச்சியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மலைராமன் கோவில்., இந்தக் கோவிலை மலையைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு செய்து வரும் சூழலில், மலைமீது ஏறிச் செல்லப் படிக்கட்டுகள், தண்ணீர் வசதி, மின்சார வசதியெனப் பல்வேறு வசதிகளையும் தரைப் பகுதியிலிருந்து மலை உச்சிவரை அமைத்துச் செவ்வாய், வெள்ளி மற்றும் மாத சிவராத்திரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தினங்களிலும் மலைமீது ஏறி வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த மலை வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதாகக் கூறி, மலைமீது ஏறி மலைராமன் கோவிலை வழிபடவும், கோவிலுக்குச் செல்லும் பாதைகளைச் சீரமைக்க கூடாது என வனத்துறையினர் தடை விதிப்பதாகவும், மீறி மலைமீது ஏறி வழிபாடு செய்தால் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மிரட்டி வருவதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டினர் ,

இந்தநிலையில் இன்று உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் வேப்பனூத்து, கள்ளபட்டி, முத்தையன்பட்டி, மேட்டுப்பட்டி, வகுரணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மலை மீதுள்ள மலைராமன் கோவிலில் வழிபாடு நடத்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்கும் வனத்துறை மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர். மேலும் மலையில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கவில்லை எனில் அனைத்து கிராம மக்களையும் திரட்டிப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகக் கிராம மக்கள் எச்சரிக்கையும் விடுத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *