
சென்னை:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் சென்ற காரைத் துரத்திய வழக்கில் கைதான 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து சோழிங்கநல்லூர் குற்றவியல் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம்பெண்கள் உள்ளிட்ட 4 பேர் சென்ற காரை, கட்சிக் கொடி பொருத்திய காரில் இளைஞர்கள் துரத்திச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஈசிஆர் முட்டுக்காடு படகு குழாம் மேம்பாலம்மீது கோவளம் கடலில் பக்கிங்காம் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்த்து ரசிப்பதற்காகச் சென்ற இளைஞர்கள் தாங்கள் சென்ற காரை நிறுத்தியுள்ளனர். அப்போது அந்தப் பெண்கள் தங்களின் காரை நிறுத்திவிட்டு கழிமுகப் பகுதியில் வேடிக்கை பார்த்து உள்ளனர்.
அதைத்தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய பெண்கள் தங்களின் காரை ரிவர்ஸ் எடுத்துள்ளனர். அப்போது பின்னால் நின்றிருந்த இளைஞர்களின் கார்மீது உரசி உள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் 2 கார்களில், பெண்கள் வந்த காரை விரட்டிச் சென்றுள்ளதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு அடுத்த நாள் கானத்தூர் காவல் நிலையத்தில் பெண்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பெண்களின் காரை இளைஞர்கள் துரத்தும் வீடியோ வெளியாகி வைரலானதால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களைத் துரத்திச் சென்று தாக்க முற்பட்டதாக எழுந்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் கானத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வீடியோக்கள் வாயிலாகக் கார் எண்கள் கண்டறியப்பட்டு இளைஞர்களைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், ஈசிஆர் சாலையில் காரைத் துரத்தி இளம்பெண்களை அச்சுறுத்திய சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அவர்களைச் சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர்படுத்தினர். கைதான 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
