புதுடில்லி: கனடா- இந்தியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின், கனடா நாட்டவர்களுக்கு ‘இ-விசா’ வழங்கும் பணியை இந்திய வெளியுறவு அமைச்சகம் துவக்கியுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்தியா – கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இருதரப்பிலும் துாதரக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, கனடா நாட்டினருக்கான விசா சேவையை அந்நாட்டில் உள்ள இந்திய துாதரகம் தற்காலிகமாக நிறுத்தியது. கனடாவின் ஒட்டாவா, டொரன்டோ, வான்கோவர் நகரங்களில் உள்ள இந்திய துாதரகங்களில் விசா வழங்கும் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின் கனடா நாட்டவர்களுக்கு ‘இ-விசா’ வழங்கும் பணியை இந்திய வெளியுறவு அமைச்சகம் துவங்கியுள்ளது.
