
திமுக ஆட்சியில் பண்டிகை நேரங்களில் சாராய விற்பனையைப் பல மடங்குகளாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக் மாடல் அரசு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளப் பதிவில் திமுக அரசை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என உருகி உருகி காணொளி வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 518 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை களைகட்டியிருக்கிறது என்றார்.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பண்டிகை நேரங்களில் சாராய விற்பனையைப் பல மடங்குகளாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக் மாடல் அரசு என்று கடுமையாக விமர்சித்தார். பொங்கல் பண்டிகைக்கு 3000 ரூபாய் அறிவித்துவிட்டு அந்தப் பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ள திமுக அரசின் அறிவாற்றலைப் பார்க்கையில், இதற்குப் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்ற நகைச்சுவையைக் குறிப்பிட்டார்.
இனியொரு முறை தப்பித்தவறி கூட மறைமுகமாக மக்களை வஞ்சிக்கும் திமுக அரசு ஆளக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.




