கழுத்தை அறுத்துக் கொலை!
மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவியைக் கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூரை அடுத்துள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி செல்வ பிரியா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தையுள்ள நிலையில் சின்னசாமி அடிக்கடி வரதட்சணை கேட்டு மனைவியைத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகச் செல்வபிரியா கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெரியவர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சின்னசாமி தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வ பிரியா கழுத்தறுக்கப்பட்டு வீட்டில் பிணமாகக் கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த சாப்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த சின்னசாமியை பிடித்து விசாரித்தபோது, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரத்தில் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சின்னசாமியை கைது செய்தனர்.
