
அமெரிக்காவில் சொகுசு விடுதியில் அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததையடுத்து அவரைப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றனர்.
அமெரிக்க அதிபர் மாளிகையில் பணிபுரியும் செய்தித் தொடர்பாளர் வாசிங்டன்னில் உள்ள ஹில்டன் சொகுசு விடுதியில் இரவு உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் அதிபர் டொனால்டு டிரம்ப், அவர் மனைவி மெலனியா, துணை அதிபர் ஜே.டி.வன்ஸ், அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல் முன்னணி ஊடகங்களின் செய்தியாளர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது விடுதியின் மாடத்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. உடனடியாக விழிப்படைந்த பாதுகாப்புப் படையினர் அதிபர் டொனால்டு டிரம்ப், அவர் மனைவி மெலனியா, துணை அதிபர் ஜே.டி.வன்ஸ், அமைச்சர்கள் ஸ்காட் பெசன்ட், கேஸ் பட்டேல், பீட் ஹெக்சேத், விட்காப் ஆகியோரைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று ஓர் அறையில் அடைத்தனர்.
விருந்து நிகழ்ந்த அறையில் உணவு பரிமாறுபவர்களும் செய்தியாளர்களும் மேசைகளின் கீழே ஓடி ஒளிந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து விடுதி வளாகத்தைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புப் படையினரின் துணிச்சலான செயல்பாட்டை அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார். அவர் டுரூத் சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள பதிவில் டி சி சீக்ரட் சர்வீஸ், சட்ட அமலாக்கத்துறை ஆகியன சிறப்பாகச் செயல்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் விரைவாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டதாகவும், துப்பாக்கியால் சுட்டவனைப் பிடித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



