
அதிமுக செயல் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமுக-வினருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக செயல் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமுக-வினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
உடுமலைப்பேட்டை தொகுதியில் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகி மாரிமுத்து கடந்த 24ஆம் தேதி அவரது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல், தேர்தல் நாளன்று தனக்கு எதிராகப் பணியாற்றியதைச் சுட்டிக்காட்டி, தான் ஓட்டி வந்த காரை, நிர்வாகி மாரிமுத்தின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உயிர் மாய்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதில் மாரிமுத்தும், அவர் மகனும் படுகாயமடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர், அப்பகுதியில் வந்தவர்கள் படுகாயமடைந்த மாரிமுத்தையும், அவர் மகனையும் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு, தொண்டாமுத்தூர் அரசு பள்ளி அருகே உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் சென்றபோதும், அந்த காரையும் திமுகவினர் தாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆட்சி முடியும் நேரத்தில்கூட, விரக்தியின் விளிம்பில் உள்ள திமுக-வினர் செய்யும் செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார். தாக்குதலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை இயக்குநரை வலியுறுத்தியுள்ளார்.





