H-1B விசா கட்டணம் உயர்வால் மீண்டும் இந்தியாவுக்கு செக்..!

அமெரிக்காவின் H-1B விசாக்களுக்கான கட்டணத்தை டொனால்ட் டிரம்ப் அரசு உயர்த்தியுள்ளது. இதனால் இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும். H-1B விசா என்பது அமெரிக்காவில் வெளிநாட்டு வல்லுநர்கள் வேலை செய்ய உதவும் ஒரு திட்டம்.

இந்த விசாவுக்கு நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய வேண்டும். டிரம்ப் அரசு இப்போது இதற்கான கட்டணத்தை $100,000 (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) ஆக உயர்த்தியுள்ளது. இது இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை மாற்றி அமைக்கும்.

இதுவரை, H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க $215 (19,000 ரூபாய்) கட்டணமாக இருந்தது. விசாவுக்கான படிவத்தை (Form I-129) நிரப்ப $780 (68 ஆயிரம்) செலுத்த வேண்டும். ஆனால் புதிய விதிப்படி, ஒரு H-1B விண்ணப்பதாரரை ஸ்பான்சர் செய்ய $100,000 (சுமார் 88 லட்சம் ரூபாய்) செலவாகும். இந்த கட்டண உயர்வு வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதை நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்ய வைக்கும்.

குறிப்பாக இந்தியாவில் இருந்து வேலைக்கு ஆட்களை எடுக்கும் நிறுவனங்கள் யோசிக்க வேண்டியிருக்கும்.அமேசான், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மைக்ரோசாப்ட், ஆப்பிள், கூகிள், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்டெக்னாலஜிஸ், ஐபிஎம் மற்றும் காக்னிசன்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் நிறைய H-1B விசா ஊழியர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. கட்டண உயர்வு காரணமாக, நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் செய்வதை தவிர்க்கலாம்.

அமெரிக்க பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இது வழி வகுக்கும்.இந்த கட்டண உயர்வை வெள்ளை மாளிகை நியாயப்படுத்துகிறது. திறமையான வல்லுநர்கள் மட்டுமே அமெரிக்காவிற்குள் வர வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று கூறுகிறது. வெள்ளை மாளிகை ஊழியர் வில் ஷார்ஃப் கூறுகையில், “H-1B விசா திட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. உள்நாட்டில் நிபுணத்துவம் இல்லாத துறைகளில் உள்ள சிறப்பு வல்லுநர்களுக்காக இது உருவாக்கப்பட்டது” என்றார்

H-1B விசா திட்டம் மூலம் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்துகின்றன. அதே வேலைக்கு அமெரிக்க ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கின்றன என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்யவே புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *