DMK Women’s right conference: பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!

Advertisements

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! கனிமொழி

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், நாங்கள் யாசகம் கேட்கவில்லை என்றும் திமுக நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில் எம்பி கனிமொழி பேசியுள்ளார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, இந்தியா கூட்டணியின் பெண் தலைவர்களான சுப்ரியா சுலே, சுஷ்மிதா தேவ், மெகபூபா முஃப்தி, ராக்கி பிர்லா, லேஷி சிங், ஆனி ராஜா, டிம்பிள் யாத, சுபாஷினி அலி என பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பேசிய கனிமொழி, பெண்களுக்கான இட ஒடுக்கீடு மசோதாவை கொண்டு வந்ததாக மார்தட்டி கொள்ளும் பாஜக 50 ஆண்டுகள் ஆனாலும், நடைமுறைக்கு வராத மசோதாவை கொண்டு வந்து இருக்கிறார்கள். மசோதா கொண்டு வந்து தேர்தலுக்காக பெண்களை ஏமாற்ற துடிக்கிறது பாஜக. பாஜக ஆளும் மாநிலங்களில் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை. மணிப்பூரில் பெண்களும், குழந்தைகளும் வாழ முடியாத நிலை உள்ளது. குஜராத்தில் பாஜகவின் அட்டூழியங்கள் பெண்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை மறக்க முடியாது. பாஜக ஆட்சியில் ஏற்படும் மதக்கலவரங்கள், வெறுப்பு அரசியல், காழ்ப்புணர்வு போன்றவற்றால் பெரிதளவில் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் புதுச்சேரியில் தலித் என்பதால் ராஜினாமா செய்ய வற்புத்தப்படுகிறேன் என கூறி பெண் அமைச்சர் ஒருவர் ராஜினாமா கடிதம் கொடுத்தார். டெல்லியில் பாலியல் துன்புறுத்தலை காட்டி மல்யுத்த வீராங்கனைகள் மாதக்கணக்கில் போராடியும் அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட சமூக பெண் என்பதால் குடியரசு தலைவரும் அவமதிக்கப்படுகிறார். குடியரசு தலைவராக இருந்தாலும், வீராங்கனைகளாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் பாஜகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஆட்சியே நடைபெற்று வருகிறது.

பாஜக ஆட்சியில் பெண்கள் ஒடுக்கப்படும் நிலையே நீடிக்கிறது. நாங்கள் யாசகம் கேட்க வில்லை எங்கள் உரிமைக்காக போராடுகிறோம் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *