ஈரோடு கிழக்கு தொகுதியை முதல் முறையாக வென்ற தி.மு.க.!

Advertisements

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி 2008-ம் ஆண்டுத் தொகுதி மறுசீரமைப்பு பிறகு உருவானது. அதன் பிறகு 2011-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முதன் முதலில் தேர்தல் நடைபெற்றது.

2011ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அ.தி.மு.கக்கூட்டணியில் தே.மு.தி.கச்சார்பில் வி.சி.சந்திரகுமார் (தற்போதைய தி.மு.க வேட்பாளர்) போட்டியிட்டார். அவரை எதிர்த்துத் தி.மு.கச்சார்பில் முத்துசாமி (தற்போதைய தி.மு.க. அமைச்சர்) போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் வி.சி.சந்திரகுமார் மொத்தம் 69 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முத்துசாமி 58 ஆயிரத்து 522 வாக்குகள் பெற்றார்.

இதில் வி.சி.சந்திரகுமார் 10 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏ.வாகப் பொறுப்பேற்றார்.

அதன் பிறகு தே.மு.தி.கத்தலைமையிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியை விட்டுப் பிரிந்து தி.மு.க.வில் சந்திரகுமார் இணைந்தார்.

அதன் பிறகு 2016ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டார்.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 64 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்றார்.

தி.மு.க. சார்பில் போட்டி யிட்ட சந்திரகுமார் 57 ஆயிரத்து 85 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 7 ஆயிரத்து 794 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதன் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.கக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவேரா போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் யுவராஜா போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் திருமகன் ஈவேரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட யுவராஜா 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்றார்.

இதனால் திருமகன் ஈவேரா 8 ஆயிரத்து 904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனார். இதன் பிறகு திருமகன் ஈவேரா மரணத்தைத் தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் தென்னரசு போட்டியிட்டார். இந்த இடைத்தேர்தலில் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்றார்.

அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகள் பெற்றார். இளங்கோவன் 66 ஆயிரத்து 575 வாக்கு வித் தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

இந்நிலையில் இளங்கோவன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்ததால் கடந்த 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த முறை தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமியும் போட்டியிட்டனர்.

அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சி தேர்தலைப் புறக்கணித்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 1 லட்சத்து 15 ஆயிரத்து 709 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24 ஆயிரத்து 151 வாக்குகள் பெற்றார்.

இந்தத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 91 ஆயிரத்து 558 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2-வது முறையாக எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் சந்திரகுமாரை தவிர நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 45 பேர் டெபாசிட் இழந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு முதல் முறையாகத் தி.மு.க. ஈரோடு கிழக்கு தொகுதியைக் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளது.

இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடந்த தேர்தலில் வி.சி.சந்திரகுமார் 91 ஆயிரத்து 558 வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

இதனால் ஈரோட்டில் தி.மு.க. கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்து வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்தத் தேர்தல் முடிவு, வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முன்னோட்டமாக இருப்பதாகக் கூறி கொண்டாடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *