
சென்னை: 2021 தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறுவோம் என்று ராயபுரம் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் இளைய அருணா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, மூத்த முன்னோடிகள் 500 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கினார். அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 500 பேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினார். பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘திமுக முன்னோடிகளுக்கு கலைஞர் அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிக்கு ரூ.5 கோடியே 50 லட்சம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு நாம் வெற்றி பெற்றதைப் போல் 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறுவோம். மூத்த முன்னோடிகள் இளைஞர்களை வழி நடத்துங்கள்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர் பாபு ,வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், கே.பி.சங்கர், பகுதிச் செயலாளர்கள் சுரேஷ், செந்தில்குமார், லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



