DMK V. S. Aramudhan Murder Case: திமுக நிர்வாகி கொலை வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண்!

Advertisements

சத்தியமங்கலம்:சென்னையை அடுத்து உள்ள வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஆராமுதன். 54 வயதான இவர் தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார்.

கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தி.மு.க. கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வந்த ஆராமுதன் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவராகவும் தற்போது பொறுப்பு வகித்து வந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நேற்று விறுவிறுப்பாகச் செய்து வந்த ஆராமுதன் நேற்று இரவு 8 மணி அளவில் வண்டலூர் பழைய பாலத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கிச் செல்லும் வழியில் தனது காரை நிறுத்திவிட்டு அவருடன் வந்திருந்த 2 பேருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் பெருமாள் கோவில் எதிரே ஸ்ரீபெரும்பு தூர் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள நிழற்குடையை திறக்கும் பணியையும் மேற்கொண்டு வந்த அவர் அதற்காகவே அப்பகுதியை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு மர்ம கும்பல் ஒன்று மின்னல் வேகத்தில் காரில் வந்து இறங்கியது. அவர்கள் 6 பேர் இருந்தனர். அனைவரும் ஆராமுதனையும் அவரது காரையும் சுற்றி வளைத்தனர்.

திடீரென அந்தக் கும்பல் ஆராமுதனின் கார்மீது வெடிகுண்டுகளை வீசியதும் இதில் கார் கண்ணாடி உடைந்து நொறுங்கி ஓட்டை விழுந்தது. இதனால் பயந்து போன ஆராமுதன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் கொலையாளிகள் அவரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவரது கை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதில் துடிதுடித்து அவர் பலியானார்.

இந்தக் கொலைசம்பவம்பற்றிக் கேள்விப்பட்டதும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் மற்றும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி விசாரணையில் இறங்கினர்.

8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.இந்நிலையில் திமுக நிர்வாகி ஆராமுதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் சரணடைந்துள்ளனர்.

கொலையாளிகள் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சத்தியசீலன், அகஸ்டின், முனீஸ் உள்ளிட்டோர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.நீதிமன்றத்தில் சரணடைந்த 5 பேரில் ஒருவர் மைனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *