
சென்னை: தொழில் அதிபருக்கு, 25 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கித் தருவதாக, 86 லட்சம் ரூபாய் சுருட்டிய, தி.மு.க., வைச் சேர்ந்த மோசடி மன்னன் முத்துவேலையும், அவரது கூட்டாளி பெண்ணையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
சென்னை கொடுங்கையூர், காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 43; தொழில் அதிபர். வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தொழில் அபிவிருத்திக்காக, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவரை அணுகி உள்ளார்.
அப்போது, ‘கிருஷ்ணகுமாரிடம், 25 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கித் தருகிறேன். அதற்குக் கமிஷனாக மூன்று தவணைகளில், 86 லட்சம் ரூபாய் தர வேண்டும்’ என, முத்துவேல் கூறியுள்ளார். அதன்படி வங்கி கடன் பெற்றுத் தராமல் பணத்தை வாங்கி மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து, கிருஷ்ணகுமார், சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து, வில்லிவாக்கம், ஜெகநாத நகரைச் சேர்ந்த முத்துவேல், 45; இவரது கூட்டாளியான, நங்கநல்லுார் நேரு காலனியைச் சேர்ந்த ஏஞ்சலினா கிறிஸ்டி நிஷா, 43, ஆகியோரை, நேற்று கைது செய்துள்ளனர்.
நந்தம்பாக்கம் போலீசார் கூறியதாவது:சென்னை வில்லிவாக்கம் பகுதியில், லயன் முத்து என்றால் மிகவும் பிரபலம். தி.மு.க., வைச் சேர்ந்த இவர், வில்லிவாக்கம் பகுதி அமைப்பாளராக இருந்துள்ளார். பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பிறந்த நாள் கொண்டாடுவது, கழுத்து நிறைய நகை அணிந்து உலா வருவது இவரது வாடிக்கை.
தன்னை பெரிய ஆள் எனக் காட்டிக்கொள்ள, போயஸ்கார்டனில் அலுவலகம் நடத்தி வந்தார். கோடிக்கணக்கில் வங்கி கடன் வாங்கித் தருவதாக, போலியாக வாக்குறுதி அளித்து, கமிஷன் தொகையைாக பல லட்சம் ரூபாயை சுருட்டுவதே, இவரின் பிரதான தொழில்.
தன்னிடம் தொழில் அதிபர்களை அழைத்து வரப் புரோக்கர்களை நியமித்து, அவர்களுக்கு, மாத சம்பளமும் வழங்கி வந்தார்.ஏற்கனவே, 200 கோடி ரூபாய்க்கு மேல் வங்கி கடன் வாங்கித் தருவது போல மோசடி செய்தது தொடர்பாக, மூன்று வழக்குகளில், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்துள்ளார். தற்போது மீண்டும் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

