புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் செந்தில் பாலாஜி! மதிய உணவு. சாதம், சாம்பார், நெய், பழம்!

Advertisements

சென்னை: முதல் வகுப்பு கைதி என்பதால், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கட்டில், மெத்தை, மின் விசிறி, தொலைக்காட்சி பெட்டி, நாளிதழ்கள், சிறப்பு உணவு உள்ளிட்ட வசதிகள், சிறையில் அளிக்கப்பட்டு உள்ளன.

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்க துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் மாலை, 5:15 மணியளவில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால், ஏழு நாட்களுக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில், டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார் என, கூறப்படுகிறது. சிறை மருத்துவமனை அருகே, விசாரணை கைதிகளுக்கான அறைகள் உள்ளன.

செந்தில் பாலாஜி, அமைச்சர் என்பதால், முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு, 001440 எனும் கைதி எண் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டில், மெத்தை, தலையணை, தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், நாற்காலி, மேஜை, நவீன கழிப்பறை, நல்ல காற்றோட்டம் கிடைக்கவும், வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

தற்போது, அவருக்கு வெளியில் இருந்து சாப்பாடு வழங்க அனுமதி இல்லை. சிறையில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை தான் சாப்பிட வேண்டும். சிறப்பு உணவாக காலையில், வெண் பொங்கல், உப்புமா, கஞ்சி வழங்கப்படும்.
அவர் இட்லி, தோசை வேண்டும் என விரும்பினால் கொடுக்கப்படும். மதிய உணவாக, சாதம், சாம்பார், கூட்டு அல்லது பொரியல் தரப்படும். இது வேண்டாம் என்றால், சிறை உணவகத்தில் வாங்கி சாப்பிடலாம்.

முதல் வகுப்பு கைதிகளுக்கு சிறப்பு உணவாக வாரத்தில் மூன்று நாட்கள், கோழிக்கறி குழம்பு சாப்பாடு வழங்கப்படும். அசைவம் வேண்டாம் என கருதினால், அதற்கு பதிலாக, சாதம், சாம்பார், பொரியல், நெய், ஒரு வாழைப் பழம் தரப்படும் என, சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *