
“வானில் பறந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள்… நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய அமெரிக்க ராணுவ தளங்கள்… மத்திய கிழக்கில் ஒயாமல் கொளுந்துவிட்டு எரியும் போர் நெருப்பு, உலக நாடுகளை மீண்டும் ஒருமுறை பதைபதைக்க வைத்துள்ளது!” கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய அமெரிக்கா – ஈரான் மோதலில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த அமைதி முற்றிலும் தகர்ந்துள்ளது.
நேற்றிரவு திடீரென ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக இடைமறித்த போதிலும், இந்தத் திடீர் தாக்குதல் வளைகுடாவில் மீண்டும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து தற்பொழுது விரிவாக பார்ப்போம் வாருங்கள்.!
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதல் போக்கு, தற்போது உலக நாடுகளை உலுக்கும் அளவுக்கு மீண்டும் ஒரு மிக ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய இந்த போர்ச் சூழல், சர்வதேச அளவில் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களும், ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ ஈரான் மூடியதும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை விண்ணை முட்டச் செய்தது.
பின்னர், உலக நாடுகளின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, இரு தரப்புக்கும் இடையே தற்காலிகமான போர் நிறுத்தம் ஏற்பட்டு ஒரு அமைதி நிலவியது. ஆனால், அந்த அமைதி இப்போது முற்றிலும் தவிடுபொடியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் எந்த மோதலும் இல்லாமல் இருந்த சூழலில், நேற்றிரவு திடீரென அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் மீண்டும் கடுமையான ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தனது சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த ஏவுகணைகளை வானிலேயே வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகவும், இதனால் பெரும் உயிர்ச்சேதமோ அல்லது சேதமோ தவிர்க்கப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது அமெரிக்கப் படைகள் அனைத்தும் மிகக் கடுமையான எச்சரிக்கை மோடில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே , ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் குறையாதது உலக நாடுகளுக்குத் தொடர்ந்து தலைவலியாகவே உள்ளது. அப்பகுதியில் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் ஈரான் கடற்கரையை ஒட்டிய பாதையில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் பல கப்பல்கள் ஓமன் கடற்கரை வழியாக மாற்றுப் பாதைகளில் பயணிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், மத்திய கிழக்கில் நடக்கும் இந்தத் திடீர் திருப்பங்கள் உலகப் பொருளாதாரத்தை உலுக்கி எடுத்துள்ளது.
இந்த அதிரடியான மற்றும் பரபரப்பான சூழலில்தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்துப் பேசினார். கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கிய பிறகு, இந்தத் தலைவர்கள் இருவரும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த ரகசியப் பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, ஈரானிடம் எந்தக் காரணத்தைக் கொண்டும் அணுஆயுதங்கள் சென்று சேர்ந்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் கொண்டுள்ள பொதுவான இலக்கு குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்தில் பேச்சுவார்த்தையின் போது ட்ரம்புக்கும் நெதன்யாகுவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது இந்தச் சந்திப்பின் மூலம் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே எந்தவிதப் பெரிய விரிசலும் இல்லை என்பதை ஈரான் போன்ற நாடுகளுக்கு மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளனர்..
இந்த மோதல்களுக்கு நடுவே, அமெரிக்காவுக்கு மற்றொரு மிகப்பெரிய மற்றும் அதிர்ச்சிகரமான உள்நாட்டுத் தலைவலியும் ஏற்பட்டுள்ளது. ஈரானுடனான இந்தத் தொடர் மோதல்களால், அமெரிக்க ராணுவத்திடம் இருப்பு உள்ள மிக முக்கியமான வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் கையிருப்பு ஆபத்தான அளவுக்குக் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் கசிந்துள்ளன. வெளியான தரவுகளின்படி, அமெரிக்காவிடம் தற்போது 827-க்கும் குறைவான ‘பேட்ரியாட்’ இடைமறிப்பு ஏவுகணைகளும், 278-க்கும் குறைவான ‘தாட்’ பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிப்பு ஏவுகணைகளும் மட்டுமே எஞ்சியுள்ளன.
போருக்கு முன்பு சிஎஸ்ஐஎஸ் மதிப்பீட்டின்படி சுமார் 2,200 பேட்ரியாட் ஏவுகணைகளும், 452 தாட் ஏவுகணைகளும் இருந்த நிலையில், தற்போது கையிருப்பு கடுமையாகச் சரிந்துள்ளது. இந்த ஆயுதப் பற்றாக்குறை குறித்து கூட்டுத் தலைமைப் படைத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், அதிபர் டிரப்பிடமும் செனட் உறுப்பினர்களுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
போதுமான நிதியும் ஆயுதங்களும் இல்லாவிட்டால், எதிர்காலத்தில் சீனா அல்லது வட கொரியா போன்ற நாடுகளின் திடீர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் அமெரிக்காவின் திறன்கூட இது கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், இந்த அதிநவீன ஏவுகணைகளை மீண்டும் உற்பத்தி செய்து முழுமையாக நிரப்புவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுதப் பற்றாக்குறையால் டிரம்ப் நிர்வாகம் திணறி வந்தாலும், மறுபுறம் ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவுக் குழுக்கள் மீது அமெரிக்க மற்றும் சவுதிப் படைகள் இணைந்து கூட்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த ஏவுகணைத் தாக்குதல்களும், அரசியல் நகர்வுகளும் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோதல்கள் எங்குபோய் முடியப் போகிறது, உலக நாடுகள் இதற்கு என்ன தீர்வு காணப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



