அமைச்சர் பொன்முடி வீட்டில் 70 லட்சம் ரூபாய் ரொக்கம்,வெளிநாட்டு பணம் பறிமுதல் !அமலாக்கத்துறை தகவல் !

Advertisements

திமுக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் 70 லட்சம் ரூபாய் ரொக்கம், மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய பல இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீடு, விழுப்புரத்தில் உள்ள எம்.பி கௌதம சிகாமணி வீடு உட்பட இதுவரை அவர்களுக்கு தொடர்புடைய 5க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிமுதல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2007 மற்றும் 2011ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது சுரங்கத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி பதவியை துஷ்பிரயோகம் செய்து செம்மண் குவாரிகளில் குவாரி விதிகளை மீறி தனது உறவினர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாகவும், இதனால் அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்படுத்தியதாகவும் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குபதிவு செய்தனர். இதனையடுத்து அமைச்சர் பொன்முடி, ஜெயசந்திரன் உட்பட மூன்று பேரை கடந்த 2012ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த போது அதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் ஏதும் நடந்துள்ளதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் கடந்த 8 மணிநேரம் நடைபெற்ற சோதனையில் 70 லட்ச ரூபாய் ரொக்கம், மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர் உட்பட வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்துள்ளதாகவும், தற்பொழுது சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத்துறை சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *