தனது பெயர்த்தியின் வற்புறுத்தலால்தான் வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்தின் மகளான செந்தாமரைக்கும் தொழிலதிபரின் மகனுக்கும் மிகவும் ஆடம்பரமாகத் திருமணம் நடைபெற்றது. வைதீக முறைப்படி சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதித் திருமணம் நடைபெற்றது. இது குறித்து சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் இது குறித்துத் துரைமுருகன் ஓர் அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார். அதில், வெளிநாட்டில் கல்வி பயின்ற தனது பெயர்த்தி வேற்றுச் சாதியைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், வைதீக முறைப்படித் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் அவரின் விருப்பப் படியே வைதீக முறையில் திருமணம் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். பெயர்த்தியின் வற்புறுத்தலால் வைதீக முறைத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் தனக்கு ஏற்பட்டதாகவும், அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதை அரசியலாக்கவோ, விவாதப் பொருளாக்கவோ யாரும் முன்வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


