திண்டுக்கல் அருகே புனித மரிய மதலேனாள் ஆலயத்தின் ஆடி பெருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியில் உள்ள புனித மரிய மதலேனாள் ஆலயத்தின் 171வது ஆண்டு ஆடி பெருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், மின் ரதத் தேர்பவனியின்போது பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. தேர் பவணியை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது தீப்பற்றி, வெடிகள் பொதுமக்கள் மீது சிதறியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 3 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து ஏற்பட்டதும் திருவிழாவில் திரண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓடியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



