விதிகளை மீறி, டி.ஐ.ஜி., ஒருவர் அடிக்கடி அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு!

Advertisements

சென்னை: நீதிமன்ற காவல் விசாரணை கைதியான அமைச்சர் செந்தில்பாலாஜியை, சிறை விதிகளை மீறி, டி.ஐ.ஜி., ஒருவர் அடிக்கடி சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில்பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜூன், 14ல், கைது செய்தனர். அவருக்கு, தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனால், நீதிமன்ற காவல் விசாரணை கைதியான செந்தில்பாலாஜி, சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில், பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். முதல் வகுப்பு கைதி என்பதால், அவருக்கு வேண்டிய வசதிகள் மற்றும் விரும்பிய உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரை, டி.ஐ.ஜி., ஒருவர் அடிக்கடி சந்தித்து வருவது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுடன், சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் இருப்பது விதிகளுக்கு எதிரானது. மீறுவோர் மீது நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். கடலுார் மத்திய சிறையில், எண்ணுார் தனசேகரன் என்ற ரவுடியுடன், காவலர் ஒருவர் அருகில் நின்று, காதோடு பேசினார் என்பதற்காக நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளார்.துாக்கு தண்டனை கைதி, ஆட்டோ சங்கரை, டி.ஐ.ஜி., ஒருவர், வாரத்திற்கு, 12 முறை சந்தித்து, நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளானார். அதேபோல, தற்போது, புழல் மத்திய சிறை வளாகத்தில், குடும்பத்தினருடன் வசித்து வரும், டி.ஐ.ஜி., ஒருவர் விதிகளை மீறி, செந்தில்பாலாஜியை அடிக்கடி சந்தித்து வருகிறார்.

அவர் இதற்கு முன், சிறை வளாகத்திற்கு வெளியே நடைபயிற்சி மேற்கொண்டு வந்தார். தற்போது, செந்தில்பாலாஜி தங்கியுள்ள மருத்துவமனை அருகே நடைபயிற்சி மேற்கொள்கிறார். அதற்கான உடையுடன் சென்று செந்தில்பாலாஜியை நலம் விசாரித்து, குறைகள் ஏதும் உள்ளதா, உணவு தரமாக இருக்கிறா என, கேட்டுச்செல்கிறார். கைதியின் நலன் கருதி, டி.ஐ.ஜி., சந்திக்கிறார். இதில் விதிமீறல் இல்லை என, கூறலாம்.
புழல் மத்திய சிறையில், 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அவர்களின் நலன் கருதி எத்தனை கைதிகளை, டி.ஐ.ஜி., நேரில் சென்று சந்தித்துள்ளார். சிறை நடத்தை விதிகள், சாதாரண காவலர்களுக்கு மட்டுமல்ல, அதிகாரிகளுக்கும் பொருந்தும். நலன் சார்ந்து தான், செந்தில்பாலாஜியை டி.ஐ.ஜி., சந்திக்கிறாரா அல்லது தன் கட்டுப்பாட்டில் அவரை வைத்துள்ளாரா எனவும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *