தோனி சிஎஸ்கே அணியை விட்டு விலகுங்கள் ஏனென்றால்..” ஒரு ரசிகனின் வேதனை குரல்!

Advertisements

இந்த ஆண்டுக்கான ஐபில் போட்டி உலகம் முழுக்க பல நகரங்களில் நடந்து வருகிறது.இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய விவாதமாக மாறி இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடுவதுதான். 43 வயதாகும் நிலையில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால். தோனி விளையாட வேண்டும் என சிஎஸ்கே அணி நிர்வாகமும், சிஎஸ்கே ரசிகர்களும் விரும்பினர்.

இதனாலேயே அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழங்கால் பிரச்சனையுடன் விளையாடி வருகிறார். கடந்த 2024 ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் கடைசி இரண்டு அல்லது மூன்று ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்தார். அவர் சில சிக்ஸர்களை மட்டும் அடித்துவிட்டு அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். பிளேயிங் லெவனை முடிவு செய்ய முடியாத நிலை இருப்பதை பலரும் அவரை விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் விளையாடி வருகிறார். அவர் கடைசி மூன்று அல்லது நான்கு ஓவர்கள் இருக்கும்போது மட்டும்தான் பேட்டிங் செய்வேன் என முடிவு செய்திருக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின்போது ஒரு ஓவருக்கு 14 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. கடைசி ஆறு ஓவர்கள் இருந்தபோது அதிரடியாக சிக்ஸர்களை அடிக்கக்கூடிய தோனி எட்டாம் வரிசையிலாவது பேட்டிங் இறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அப்போதே சிஎஸ்கே அணியின் தோல்வியும் உறுதியானது.

அப்போது பலருக்கும் எழுந்த கேள்வி என்னவெனில், சிஎஸ்கே அணியின் வெற்றிக்காக தோனியால் சில ஓவர்கள் முன்பே இறங்கி பேட்டிங் செய்ய முடியவில்லை என்றால் அவர் நிச்சயம் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டுமா? இந்த முழங்கால் பிரச்சனையுடன் அவர் எதற்காக தொடர்ந்து சிரமப்பட வேண்டும்? என்பதே. இது நியாயமான சிஎஸ்கே ரசிகர்களுக்கும் எழுந்துள்ள கேள்விதான். தோனியிடம், “ஏன் இன்னும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறீர்கள்?” என்ற கேள்வியை கேட்கும் போதெல்லாம், சிஎஸ்கே அணி நிர்வாகமும் ரசிகர்களும் தன்னை இழுத்து வந்து விடுகிறார்கள் என்கிறார். ரசிகர்கள் சில ஓவர்கள் அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பதற்காகத்தான் இதை விரும்புகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், இது உலகின் முதன்மையான கிரிக்கெட் தொடர் என்பதை அவர் மறந்துவிட்டாரா? என்ற கேள்வியும் எழுகிறது

கிரிக்கெட் உலகையே மாற்றி அமைத்து வரும் ஐபிஎல் தொடரில் தோனியின் விருப்ப அணியான சிஎஸ்கே தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டும். அதற்கு அந்த அணி 100 சதவீதம் அனைத்து விதங்களிலும் தயாராக இருக்க வேண்டும். தோனி என்ற ஒரு பேட்ஸ்மேன் கடைசி பத்து ஓவர் வரை நின்று விளையாட முடியாது என்றால் அது நிச்சயம் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ள ஒரு பின்னடைவுதான். இதை தோனியாகவே உணர வேண்டும். சிஎஸ்கே நிர்வாகமோ அல்லது ரசிகர்களோ அவரை வற்புறுத்தினாலும் அவர் தனது நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். உலகின் சிறந்த டி20 கேப்டன்களில் ஒருவரான தோனி சிஎஸ்கே அணியின் ஆலோசகராக இருந்து, களத்துக்கு வெளியே இருந்து முடிவுகளை எடுத்தால் அதை ரசிக்கவும் பெரும் கூட்டம் உள்ளது. தோனி ஐபிஎல் தொடரின் முகம் என்பதை ஒரு வீரராக மட்டுமல்ல. இப்படியும் வெளிப்படுத்தலாம். தற்போது சிஎஸ்கே அணியில் தோனியின் இடத்தில் வேறு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விளையாடினால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒருவேளை அந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மிடில் ஆர்டரிலோ அல்லது துவக்க வீரராகவோ களமிறங்கினால் தற்போது சிஎஸ்கே அணியில் இருக்கும் பேட்டிங் பலவீனத்தை அது நிச்சயம் ஈடுகட்டும். எப்படி ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே போன்ற வீரர்களை தோனி பட்டை தீட்டினாரோ அதேபோல ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனையும் அவரால் மிக எளிதாகவே பட்டை தீட்ட முடியும். அவர் உண்மையாகவே சிஎஸ்கே அணியின் வளர்ச்சி குறித்து சிந்தித்தால் இது போன்ற அடுத்த கட்டத்தை நோக்கித்தான் செல்ல வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியின்போது கூட கடைசி நான்கு ஓவர்களில் 54 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி தான் சந்தித்த முதல் ஆறு பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஒரு ஓவருக்கு 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் அவர் அப்படி ஆடியது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை பலரும் சுட்டிக்காட்டி, தோனி அந்த ஆறு பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்ததற்கு மாறாக அந்த ஆறு பந்துகளில் பத்து ரன்கள் எடுத்திருக்கலாமே என்கிறார்கள். 2007 டி20 உலகக் கோப்பை தான் டி20 கிரிக்கெட்டின் ஆரம்பம். தற்போது அது பல மடங்கு வளர்ச்சியை கண்டுவிட்டது. அன்று 2007 இல் இந்தியா தோனி தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றதால்தான் ஐபிஎல் என்ற ஒரு மெகா கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சியில் தோனியின் பங்கும் மிகவும் அதிகமாக உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *