Devanathaswamy temple: நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தரும் பெருமாள்!

Advertisements

நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தரும் பெருமாள்! தேவநாதசாமி கோவில்…

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவில் கெடிலம் ஆற்றங்கரை யோரத்தில் அமைந்துள்ளது.ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப் பெற்ற திவ்யதேசங்கள் 108-ல் இந்தக் கோவிலும் ஒன்றாகும். இந்தத் திருக்கோவில் பல்வேறு காலங்களில் அரசர்கள் பலரால் அவ்வப்போது கட்டப்பெற்று புதுப்பிக்கப் பட்டுள்ளது.

கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்தத் தேவநாதசாமி கோவில். இந்தக் கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும். கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.

கோவிலில் பிரதானமாகப் பூஜிக்கப்படும் தாயார் அம்புருவர வாசினி, ஹேமாம்புஜநாயகி, தரங்கமுகநந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் முதலிய பல திருநாமங்களுடன் விளங்குகிறார். பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, மார்க்கண்டேயர் முதலிய பலரும் தவம் புரிந்து தேவநாதசாமியை தரிசித்து வரம் பெற்ற தலம் இதுவாகும்.

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் தேவநாதசாமிக்கும், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தேசிகருக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆடிப்பூரம், பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி முதலிய உற்சவங்களும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்தக் கோவிலில் 12 மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது.

திருமணம்:

திருமண தடை நீக்கும் தலமாக இந்தக் கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்தக் கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்துத் திருமணத்தை நடத்துகிறார்கள்.

இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம்வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்குத் திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.

புனித தீர்த்தங்கள்:

இந்தக் கோவிலில் கருட பகவானால் கொண்டு வரப்பெற்ற கெடில நதியும், ஸ்ரீஆதிசேஷன் தன் வாலினால் அமைத்த சேஷக்கிணறும், பிரம்ம தீர்த்தம், பூத்தீர்த்தம் மற்றும் லட்சுமி தீர்த்தம் என 5 வகை தீர்த்தங்கள் உள்ளன.

தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி உற்சவம்:

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமைகளிலும் வெகுவிமர்சையாக விழா  நடைபெறும்.

தேசிகர் உற்சவம்:

மேலும் புரட்டாசி மாதத்தில் முக்கிய விழாவாகத் தேவநாதசாமியின் பக்தராக இருந்து தியானம் செய்து முக்தி அடைந்த தேசிகர் மகா உற்சவம் நடக்கிறது.

தினமும் காலை மற்றும் மாலையில் பல்லக்கு, தங்க விமானம், சூரிய பிரபை, யாளி வாகனம், பிள்ளைகிளை வாகனம், சந்திர பிரபை, மோகன அவதாரம், வெள்ளி சிம்ம வாகனம், வெண்ணைத்தாழி சேவை, யானை வாகனம், சூர்ணாஅபிஷேகம், தங்க விமானம், பேட்டை உற்சவம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெறுகிறது.

நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள்:

புரட்டாசி மாதம் வரக்கூடிய நான்கு சனிக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேவநாதசாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பொது மக்கள் மொட்டை யடித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர்.

திருவந்திபுரம் தேவநாதசாமி திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்று கருதப்படுகிறார். எனவே திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாவிட்டால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினால் போதுமானது எனக் கூறப்படுகிறது. அதன்படி பக்தர்கள் திருப்பதிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டாலும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்துப் பெருமாளை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கோவில் நடை  திறக்கும் நேரம்:

இந்தக் கோவிலில் தினமும்  காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்குச் சாற்றப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *