
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் கலப்படம் செய்யப்பட்ட18 லிட்டர் பதநீர் கைப்பற்றப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
குற்றாலத்தில் சாலையோரம் உள்ளம் டீக்கடைகள் மற்றும் நுங்கு விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பழைய குற்றாலம் பகுதியில் சாலையோரம் பதநீர் விற்பனை செய்து கொண்டிருந்த வியாபாரியிடம் சோதனை மேற்கொண்டதில் அதிகளவு சுண்ணாம்பு மற்றும் சாக்ரீன் போன்ற பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து 18 லிட்டர் பதநீர் கைப்பற்றப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. இதே போன்று குத்துக்கல் வலசை பகுதியில் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வடை, முறுக்கு, கேக் உள்ளிட்ட 14 கிலோ காலாவதியான தின்பண்டங்கள் பினாயில் ஊற்றி அளிக்கப்பட்டது. மேலும் குற்றாலத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்குச் சுகாதாரமான முறையில் உணவுப் பண்டங்களை வழங்க வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து சென்றார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூடப் பிரியாணி கடை ஒன்றில் 33 கிலோ பதப்படுத்தப்பட்ட மீன், சிக்கன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டதோடு உணவகங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பிரபல பரோட்டா கடையிலும் இதே போன்று ஆய்வு மேற்கொண்டு கெட்டுப்போன பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிரதான சுற்றுலா தலமான குற்றாலத்தில் தொடர்ந்து இது போன்று பல்வேறு உணவங்களில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதும் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழிப்பதும் பொதுமக்களிடையே அச்சத்தையும், வியாபாரிகளிடையே கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

