Indoor Farming: எளிய முறையில் வீட்டில் கீரை வளர்ப்பு!

Advertisements

எளிய முறையில் வீட்டில் கீரை வளர்ப்பு!

காய்கறி வகைகளை விட கீரை வகைகள் நம் உணவு பட்டியலில் சத்து மிக்கவையாக இருக்கின்றன. தினமும் கீரையை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு அடிக்கடி உடல் ஆரோக்கிய தொந்தரவுகள் வரவே வராது. எப்போதும் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் ஒரு மனிதன் வாழ வேண்டிய அத்தனை சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன.
இது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்வதற்கு சோம்பல் பட்டு அடிக்கடி யாரும் இதை சமைப்பதில்லை. சிறிய தொட்டியில் கூட கீரையை சுலபமாக வளர்த்து விடலாம். 10 நாட்களில் துளிர் விட்டு அறுவடை செய்யும் நிலைக்கு கீரை வளர்ந்து விடும். கீரை வகையை சமைத்து சாப்பிடுவதை விட! வளர்ப்பது அவ்வளவு சுலபமாக இருக்கும் என்றே கூறலாம்.

Advertisements

கீரையை வீட்டில் வளர்ப்பது பற்றிய இன்னும் பல ஆச்சரிய தகவல்கள் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.


கீரையை சிறிய தொட்டியில் விதைகள் போட்டு பத்து நாட்களுக்குள் துளிர்விட செய்து சுலபமாக வளர்த்து விடலாம். இதற்கு அதிக வெயில் கூட தேவையில்லை. இடம் கூட பெரியதாக தேவைப்பட போவதில்லை. நீங்கள் அப்பார்ட்மெண்டில் இருந்தாலும் பால்கனியில் கூட வைத்து வளர்த்து விடலாம். அந்த அளவிற்கு சுலபமாக வளர்க்கக் கூடிய கீரை வகைகள் ஏராளம் உள்ளன. அதிலும் குறிப்பாக அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை போன்றவற்றை மிக சுலபமாக வளர்த்து விட முடியும். அதற்கு என்னவெல்லாம் தேவை? என்ன செய்ய வேண்டும்? என்பதை இனி பார்ப்போம்.

முதலில் அகலமான ஒரு தொட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 50% தேங்காய் நார் உரமும், மீதி 50 சதவீதம் மண்புழு உரமும் சேர்த்து நன்கு கலந்து தொட்டியில் போட்டுக் கொள்ள வேண்டும். தேங்காய் நார் இருப்பதால் அதிக தண்ணீர் கூட தேவைப்படுவதில்லை. ஒரு நாள் விட்டு ஒரு நாள் அரை டம்ளர் தண்ணீர் தெளித்து விட்டால் போதும். பச்சை பசேலென பூச்சிகள் கூட இல்லாமல் செழித்து செழிப்பாக வளர்ந்து விடும்.

நர்சரிகளில் கீரை விதைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் விலையும் ஒன்றும் அதிகம் இல்லை. 20 ரூபாய்க்குக் கூட கீரை விதைகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வந்து தொட்டியில் பரப்பியுள்ள உரக் கலவையின் மீது தூவி விட்டு கைகளால் லேசாக கலந்து விட்டு கொள்ளுங்கள். ஒரு குச்சியை ஊன்றி வையுங்கள்.

லேசான இளவெயில் அதன் மீது படும் படியாக வைத்து விட்டால் போதும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் சிறிதளவு தண்ணீர் தெளித்து விட்டு விட்டால் போதும். பத்தே நாட்களில் துளிர் விட்டு செழுமையாக வளர ஆரம்பித்து விடும். விதைகள் அதில் குறைவாக இருப்பதால் வேரோடு நீங்கள் அறுவடை செய்யாமல் உங்களுக்கு தேவையான அளவிற்கு கில்லி எடுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் துளிர் விட ஆரம்பிக்கும். மறுபடியும் நமக்கு தேவைப்படும் பொழுது கில்லி எடுத்துக் கொள்ளலாம்.

இது போல் மூன்றிலிருந்து நான்கு முறை செய்து கொள்ளலாம். அதன் பிறகு வேரோடு எடுத்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். சாதாரண மண் கலவைவை விட இந்த உரக் கலவையில் கீரைகள் செழித்து பூச்சிகள் இன்றி பச்சை பசேலென வளர்ந்து விடும். உடல் ஆரோக்கியம் தரும் கீரை வகைகளை எல்லோரும் வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. நீங்களும் உங்கள் வீட்டில் வளர்த்து பார்த்து பயனடையுங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *