தமிழ் இளைஞனைக் கொடூரமாகக் கொன்ற வடமாநிலத்தவர்..!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செங்கல் சூளைத் தொழிலாளி சரவணனைக் கொடூரமாகக் கொன்ற வடமாநிலக் கொலையாளிகளை விரைந்து கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டன்சத்திரம் அருகே தும்பலப்பட்டியைச் சோ்ந்த சரவணன், செங்கல் சூளையில் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியும் மனவேதனையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் குடியேறியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களால் கொலை கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் ஆதிக்கத்தால் தமிழர்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவை பறிபோவதோடு கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் அதிகமாகி, மக்கள் வெளியில் நடமுடியாத அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரையே தாக்கும் அளவிற்கு வடவர்களின் வன்முறை வெறியாட்டம் நடைபெறுவது எந்த அளவிற்குப் பேராபத்தான சூழலை நோக்கி தமிழ்நாடு தள்ளப்படுகிறது என்பதற்குச் சான்றாகும் எனச் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

சட்டம்-ஒழுங்கைச் சீரமைக்க திமுக அ ரசு இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வடமாநிலத்தவருக்கு உள்நுழைவுச் சீட்டு முறையினை உடனடியாக நடைமுறைப்படுத்தி, இதுபோன்ற கொடூரங்கள் இனியும் தொடராதவாறு தடுக்க வேண்டுமெனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சரவணன் குடும்பத்திற்கு உரிய நிதியுதவி வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *