
புதுடில்லி: டீப் பேக் மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போலி வீடியோ, புகைப்படம் தொடா்பான ‘டீப் பேக்’ தொழில்நுட்பம்குறித்து சமூக வலைதள நிறுவனங்களுடன் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (நவ.23) ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சமூக வலைதளங்களுடன் ‘டீப் பேக்’ விவகாரம்குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். டீப் பேக் மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த சில வாரங்களில் புதிய விதிமுறைகளை உருவாக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரித்து, அதற்காக அரசு, தொழில்துறை மற்றும் ஊடகங்கள் இணைந்து செயல்பட வேண்டும். டீப் பேக் மூலம் படம், காணொளி உருவாக்குவதை தடுக்க விரைவில் சட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



