
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவு “மோன்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று, மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28-ஆம் தேதி மாலை இரவு நேரத்தில் கரையை கடக்கக்கூடும்.
அச்சமயத்தில் காற்றின் வேகம் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


