
ஹாமூன் புயல் காரணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்க கடலில் உருவான நேற்று உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயலுக்கு ஹாமூன் எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில் வடகிழக்காக நகர்ந்து ஒடிசாவின் பாரதீப்பிலிருந்து 400 கி.மீ., தொலைவிலும், மேற்கு வங்கத்தில் திகாவிலிருந்து 550 கி.மீ., தென்மேற்கு திசையிலும் மையம் கொண்டிருந்த இப்புயல் ஒடிசா மாநிலத்தில் பல இடங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாகக் கடலோர மாவட்டங்களான கியோஞ்சர், மயூர் பஞ்ச், அங்குல், கந்தமால், ராயகடா, தேன்கனல், ராயகடா, மல்கங்கிரி ஆகிய பகுதிகள் அதிகப்படியான மழையை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் இன்று மழையின் பாதிப்பு அதிகம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் மாநில அரசு தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புயல் நாளை (அக்டோபர் 25) வங்கதேசத்தில் உள்ள கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிக் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் காரணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது புயல் உருவாகியுள்ளது என எச்சரிக்கை விடுப்பதை குறிக்கும். அதேசமயம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ் கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.




