
மக்களின் எதிர்ப்பையும் மீறிப் பாலாற்றில் மணல் குவாரி திறப்பதா? ஆட்சியின் கடைசி நிமிடம் வரை கொள்ளையடிப்பது தான் கொள்கையா? என்று பாமக தலைவர் அன்புமணி வினவியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் சக்கரமல்லூரில் மக்களின் எதிர்ப்பையும் மீறிப் பாலாற்றில் மணல் குவாரி திறந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பாலாற்றில் மணற்கொள்ளையால் நிலத்தடி நீர் வளப் பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றைப் பொருட்படுத்தாமல் கொள்ளையடிக்கும் நோக்குடன் மணல்குவாரிகளைத் திறப்பதைக் கண்டித்துள்ளார்.
சக்கரமல்லூரில் மணல் குவாரி தொடங்கியுள்ளது இயற்கையின் மீதான கொடும் தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ள அன்புமணி, இதேபோல் புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர், நாமக்கல் மாவட்டங்களிலும் மணல் குவாரி திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேர்தல் வரை மணல் குவாரிகளைத் திறப்பதில்லை என்று ஜனவரி ஒன்றாம் தேதி முடிவெடுத்த நிலையில் அதற்கு அடுத்த நாளே புதிய குவாரி திறக்க அனுமதித்தால் ஆட்சிக்காலத்தின் கடைசி நிமிடம் வரை இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துக் கோடிகளைக் குவிக்க வேண்டும் என்ற பேராசையே காணரம் என்று அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

