Indo-Canadian relations: இடையேயான உறவில் விரிசல்?

கனடாவில் காலிஸ்தானிய தலைவர் படுகொலை சம்பவத்தில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்குள்ள தொடர்புபற்றி விசாரணை நடந்து வருகிறது எனப் பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார். இதனிடையேகனடாவில் உள்ள இந்திய உளவுத்துறை தலைவர் வெளியேற்றப்பட்டுள்ளதாகக் கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி உறுதி செய்துள்ளார்…

ஒட்டாவா: கனடா நாட்டில் இந்துக் கோவில்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என நீண்டகால குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தத் தாக்குதல்களில் காலிஸ்தானியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. கனடாவில் இந்துக் கோவில்கள்மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோக்களும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தின.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் கனடாவின் சுர்ரே நகரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தானிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், கனடாவின் குடிமகனாகவும் இருந்துள்ளார். சுர்ரே நகர குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இவருடைய படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்குத் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றிக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கும் கனடா குடிமகனின் படுகொலைக்கும் இடையே உள்ள தொடர்புபற்றிக் கனடா பாதுகாப்பு முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன எனக் கூறினார்.

கனடாவில் குடிமகன் ஒருவர் படுகொலையில் அந்நியர் ஒருவரின் அல்லது வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்று அவர் அழுத்திக் கூறினார். இதனால், சில இந்தோ-கனடியர்கள் கோபத்தில் உள்ளனர் என்றும் அச்சத்திலும் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே இந்த விவகாரத்தில், உண்மை விவரங்கள் தெரிய, கனடாவுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.மேலும் கனடாவில் உள்ள இந்திய உளவுத்துறை தலைவர் வெளியேற்றப்பட்டுள்ளதாகக் கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்“ இது நமது இறையாண்மை மற்றும் நாடுகள் ஒருவருக்கொருவர் எவ்வாறு கையாள்வது என்பதற்கான மிக அடிப்படையான விதியின் பெரும் மீறலாகும்” என்று ஜோலி கூறினார்.

“இதன் விளைவாக நாங்கள் ஒரு உயர்மட்ட இந்திய இராஜதந்திரியை வெளியேற்றியுள்ளோம்,” என்று ஜோலி கூறினார். ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க ஜனாதிபதி ஜோப்பிடனிடம் இந்த விஷயத்தை எழுப்பியதாகவும் அவர் கூறினார். எனினும் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் இந்தியா, கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்ப்பட்டுள்ளது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *