Hardeep Singh Nijjar Killing: இந்தியா பதிலடி!

கனடாவில் காலிஸ்தானிய தலைவர் படுகொலை சம்பவத்தில் இந்தியாவின் தூதரைக் கனடா வெளியேற்றிய நிலையில், பதிலடியாகக் கனடா தூதரை வெளியேறும்படி இந்தியா கூறியுள்ளது…

ஒட்டாவா: கனடா நாட்டில் இந்துக் கோவில்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என நீண்டகால குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தத் தாக்குதல்களில் காலிஸ்தானியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. கனடாவில் இந்துக் கோவில்கள்மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோக்களும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தின.

இதில் கனடாவின் சுர்ரே நகரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தானிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இவருடைய படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்குத் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றிக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கும் கனடா குடிமகனின் படுகொலைக்கும் இடையே உள்ள தொடர்புபற்றிக் கனடா பாதுகாப்பு முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன எனக் கூறினார்.

இந்த நிலையில், கனடாவுக்கான இந்திய தூதரை வெளியேற்றிக் கனடா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை, கனடா நாட்டு வெளியுறவு மந்திரி மெலனி ஜாலி உறுதிப்படுத்தினார். எனினும், அவருடைய பெயர் உள்ளிட்ட பிற விவரங்களை வெளியிடவில்லை. இந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா தூதர் கேமரூன் மெக்கேவை இந்தியாவிலிருந்து வெளியேறும்படி மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *