
இந்தியாவின் பதினைந்தாவது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி.இராதாகிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்ட சி.பி.இராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை விட 152 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் இந்தியாவின் பதினைந்தாவது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி.இராதாகிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார். கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுத்துக் கொண்ட சி.பி.இராதாகிருஷ்ணன் கோப்பில் கையொப்பமிட்டுப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் அவையில் உள்ள அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, குமரசாமி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்கள் ஜெகதீப் தன்கர், வெங்கைய நாயுடு, அமீது அன்சாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


