முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்த7 பேரும் 30 நாட்களுக்குக் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில், முதலாம் ஆண்டு மாணவரைச் சீனியர் மாணவர்கள் சிலர் ராகிங் செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை பீளமேடு போலீசார் கல்லூரிக்குள் சென்று 7 மாணவர்களை அதிரடியாகக் கைது செய்தனர்.
இந்த 7 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் 7 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் 8 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் ஜாமீன் கோரி விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்குக் கோவை கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இவர்கள் 30 நாட்களுக்கு அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.