தமிழக பட்ஜெட்டில் தொல்லியல் துறைக்கு வெறும் 1 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டிய துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு இந்த நிதியாண்டில் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை கூட தெளிவாக அறிவிக்காதது, இந்தத் துறையின் மீதான அரசின் முன்னுரிமையை கேள்விக்குறியாக்குகிறது என்று தெரிவித்துள்ளார். தொல்லியல் துறைக்கு வெறும் 1 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தமிழர் நாகரிகத்தை ஆய்வு செய்து, பாதுகாத்து, உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு துறைக்கு இந்த அளவிலான நிதி போதுமானதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழரின் வரலாற்றுப் பெருமையைப் பற்றி பேசுவது மட்டுமல்ல, அதை ஆதாரப்பூர்வமாக ஆராய்ந்து பாதுகாக்க தேவையான முதலீட்டை செய்வதே ஒரு அரசின் பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பொறுப்பை இந்த பட்ஜெட் நிறைவேற்றியுள்ளதா என்பது மக்களிடம் எழும் மிக முக்கியமான கேள்வியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


