
கோவை:
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலம் எடுப்பதற்காக ரூ.154 கோடி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.
கணபதி டெக்ஸ்டூல் பாலத்திலிருந்து சூர்யா மருத்துவமனை சந்திப்பு வரையிலான 1.1 கிமீ நீளத்திற்கு ரோட்டின் கிழக்குப் பகுதியில் நிலம் எடுக்கப்படவுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னையைத் தொடர்ந்து அடுத்ததாகக் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரு நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான பணிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கோவையைப் பொறுத்தவரை விமான நிலையம், பேருந்து நிலையம் மற்றும் புறநகர்ப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அதற்காக முதல் கட்டமாக அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலை ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 34.8 கிமீ நீளத்திற்கு வழித்தடம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான திட்ட மதிப்பீடாக ரூ.10,740 கோடி கணக்கிடப்பட்டுள்ளது. நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து பிரச்சனைகளைக் குறைக்க மெட்ரோ ரயிலை விரைவாகக் கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அதேபோல் திட்டத்தைச் செயல்படுத்தும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை குறைக்கவும், நிலம் கையகப்படுத்துதல், மேம்பாலத் திட்டங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது.
இதற்காகக் கடந்த வாரமே மெட்ரோ ரயில் இயக்குநர் சித்திக், எம்பி கணபதி ராஜ்குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மெட்ரோ ரயில் அதிகாரிகள் பேசுகையில், 3 கிமீ தொலைவு மேம்பாலத்திற்கு டெக்ஸ்டூல் முதல் சூர்யா மருத்துவமனைவரை 20 மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படும். மெட்ரோ ரயில் திட்டம் நிலம் கையகப்படுத்த கால அவகாசம் தேவை என்று கூறினர்.
இந்த நிலையில் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலம் எடுப்பதற்காக ரூ.154 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கணபதி டெக்ஸ்டூல் பாலத்திலிருந்து சூர்யா மருத்துவமனை சந்திப்பு வரையிலான 1.1 கிமீ நீளத்திற்கு, ரோட்டின் கிழக்குப் பகுதியில் நிலம் எடுக்கப்படவுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக மெட்ரோ ரயில் பணிகள் வேகமெடுத்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
