திமுக கவுன்சிலர் கைது? ரசித்த சேகர்பாபு – பிரியா..!  

சென்னையில் அக்டோபர் 17ஆம் தேதி திமுக முப்பெரும் விழா பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி, மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் எம்பி அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கவுன்சிலர் சுதா தீனதயாளன், முதல்வர் விஜய்யை ஒருமையிலும் தரக்குறைவாகவும் விமர்சித்துப் பேசியிருந்ததாக கூறப்படுகிறது. எங்கள் தலைவருக்கு வயது 74, உங்களுக்கு வயது 52தான்” என கூறிவிட்டு சுதா தீனதயாளன் பேசிய வார்த்தைகள் மிகவும் மோசமாகவும், இழிவாகவும் இருந்தது.

இவர் பேச பேச மேடையில் இருந்த மேயர் பிரியாவும், சேகர்பாபுவும் சிரித்துக் கொண்டிருந்தனர். எனினும் அருகில் இருந்த எம்பி கனிமொழி மட்டும் முகம் சுழித்ததாகவும், பின்னர் கனிமொழி பேசிய போது “முப்பெரும் விழா கண்ட கட்சி திமுக என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பேச வேண்டும் என இங்கிருக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் நான் கோரிக்கையாக வைக்கிறேன். அவர்களை போல் நாமும் தரம் தாழ்ந்து பேசக் கூடாது” என மேடையிலேயே கண்டித்தார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியானது. இந்த வீடியோவை பார்த்த தவெக நிர்வாகி உதயகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், கூட்டத்தை ஏற்பாடு செய்த முரளிதரன் மற்றும் அவதூறாகப் பேசிய கவுன்சிலர் சுதா தீனதயாளன் ஆகிய இருவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் கீர்த்தனா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது. வன்மையான கண்டனங்கள்! மேடை நாகரிகம் துளியும் இல்லாமல் பெண்களை தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவருக்கும், எதிர்க் கட்சித் தலைவருக்கும், தமிழ்நாட்டு மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலமாகத் தண்டனை வழங்கி, தக்க பாடம் புகட்டினார்கள்.

நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான் திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை அவமதித்து, திமுக மேடையில் நின்று கொண்டு,நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர்.

அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா இந்த நாராசப் பேச்சைக்கேட்டு குதூகலித்து சிரிக்கிறார். மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி MP இந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். “தேர்தலில் தோற்ற விரக்தி உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?”

ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல – பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது. கனிமொழி MP, மேயர் பிரியா, உங்கள் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா?

இந்த கள்ள மவுனத்தின் மூலமாக, நீங்களும் திமுக வின் ஆபாச – அநாகரிக DNA கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா? தமிழ்நாட்டு மக்கள்,திமுக வினரின் ஆபாச – அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுக வுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” சென்னை பெருநகர காவல், பூக்கடை காவல் மாவட்டம், B-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் உதயகுமார், த.வெ.க. துறைமுக பகுதி செயலாளர் என்பவர் ஆஜராகி கொடுத்த புகார் மனுவில், இராஜா அண்ணாமலை மன்றத்தில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் முப்பெரும் விழா துறைமுக பகுதி செயலாளர் முரளி என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்விழாவில் தி.மு.க.வை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவை தலைமை ஏற்று உரையாற்றிய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வில்லிவாக்கம் பகுதி தி.மு.க 95வது வட்ட கவுன்சிலர் சுதா தீனதயாளன் என்பவர் பேசும்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி இரு தரப்பினரிடையே பிரச்சனை உண்டாக்கும் நோக்கத்திலும், பொது மக்களிடையே பதற்றம் ஏற்படுத்தும் விதத்திலும் பேசியுள்ளார் என்றும், மேற்படி சுதா தீனதயாளன் மற்றும் இவ்விழாவை ஏற்பாடு செய்த முரளி ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயகுமார் என்பவர் புகார் கொடுத்ததின்பேரில், B-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு புலன் விசாரணையில் உள்ளது” ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *