பூபாலன் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் காவல்துறையினருக்கும் தொடர்பா.?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 137 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் வழக்கில், லஞ்சம் பெற்றதற்கான தடயங்கள் சிக்கியதை அடுத்து, வேளாங்கண்ணி பெண் காவலர் உட்பட இரண்டு காவலர்கள் தஞ்சாவூருக்கு அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தப் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் காவல்துறையைச் சேர்ந்த சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே எழுந்து வந்தது. இந்நிலையில், கைதானவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் தொலைபேசி பதிவுகளை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் மற்றும் மற்றொரு காவலர் ஆகியோர் குற்றவாளிகளிடம் இருந்து லஞ்சம் பெற்றது தொடர்பான உறுதியான தடயங்கள் துறைசார் அதிகாரிகளுக்குச் சிக்கியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, துறை ரீதியான முதற்கட்ட நடவடிக்கையாக அந்த இரண்டு காவலர்களும் நாகை மாவட்டத்திலிருந்து தஞ்சாவூருக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர்களுக்கும், கைது செய்யப்பட்டுள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா? அல்லது கடத்தலுக்கு உடந்தையாக இருந்து மாமூல் வசூலித்தார்களா? என்பது குறித்து காவல்துறை உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் முடிவில் அவர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை அல்லது கைது நடவடிக்கை பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் காவல்துறையினரே சிக்கியுள்ள சம்பவம் நாகை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *