
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.64.53 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.11.2024) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.64 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காகவும், ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் நல்ல காற்றோட்டமான அலுவலக சூழலில் பணியாற்ற ஏதுவாகவும், பழைய பழுதடைந்த கட்டிடங்களுக்குப் பதிலாகப் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டும் திட்டம் 2008-ஆம் ஆண்டுக் கலைஞர் தலைமையிலான அரசால் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, தற்போது வரை 312 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 265 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – புள்ளம்பாடி, திருப்பூர் மாவட்டம் – பொங்கலூர், விழுப்புரம் மாவட்டம் – கானை, மேல்மலையனூர், முகையூர் மற்றும் வானூர் ஆகிய இடங்களில் 64 கோடியே 53 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வனத்துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா, இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.



